தள மேம்பாடுகள், இன்ன பிற…

‘தளத்தில் சில நுட்ப ரீதியான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ அப்படின்னு officialஆ இந்தப் பதிவ தொடங்கியிருக்கலாம். ஆனா ஒரு சகஜமான தொனியிலேயே இந்தப் பதிவை எழுதலாம்ன்னு நினைச்சேன். மேலும், இந்த வலைப்பதிவை மாற்றுக்கான Twitterஆ மாற்றும் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கு. என்னைப் போலவே இதர பங்களிப்பாளர்களும் இதில் எழுதுவாங்கன்னு நம்பறேன் (கட்டாயமா எழுதணும்).

கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் தவறுதலா ஒரு மடல் வந்து சேர்ந்தது. தமிழ் விக்கிப்பீடியா, ‘தமிழா’, போன்ற ‘தன்னார்வ’ அடிப்படையில் தீவிரமா இயங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு மட்டுமே போயிருக்க வேண்டிய அந்த மடல், தவறுதலா ‘தன்நல’ அடிப்படையில் மட்டுமே இயங்கிக்கிட்டு இருந்த எனக்கும் வந்து சேர்ந்தது. அந்த மடல் ஆரம்பித்து வைத்த விவாதங்கள், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பலரது ஆர்வத்துடனான ஈடுபாடு, தொடர்ந்த செயல்பாடுகள், ஆதரவுக் கரங்கள், மதிப்பிற்குரிய ஆலோசனைகள், அப்படீன்னு ஒரு பட்டியலிடக்கூட முடியாத கோர்வையான நிகழ்வுகளால இன்னைக்கு மாற்று வலைத்தளம் வெற்றிகரமா இயங்கிக்கிட்டு இருக்கு.

தமிழில் எழுதப்படும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் மதப் பரப்பு, கொள்கைப் பரப்பு, மனச்சாய்வுகள் / வெறுப்புணர்வு, ஆசா பாசங்கள் / ஆபாசங்கள், சராசரிக்கும் கீழான ரசனை, அப்படின்னு குறிச்சொல் போட்டு பிரிச்சா மிஞ்சுவது சொற்பமான பதிவுகளாத்தான் இருக்கும். இந்த சொற்பமான பதிவுகளை மட்டும் ஒரு தளத்தில் தொகுத்து வழங்கினா எப்படி இருக்கும்ன்னு எழுந்த நப்பாசையின் விளைவுதான் மாற்று!. அதில் எவ்வளவு தூரம் வெற்றியடைஞ்சிருக்கோம்ன்னு தெரியல. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லைன்னு நாங்க தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டும், அவ்வப்போது தளத்தை மேம்படுத்தி, செயல்பாட்டிலுள்ள இணைய முன்மாதிரிகளோட ஒப்பிடும் வகையில் எங்கள் தளத்தை பராமரித்து வருவதிலயும், முழு கவனத்தையும் செலுத்திக்கிட்டு இருக்கோம். இந்த முயற்சி வெற்றியடையும் என்ற அசராத நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

மாற்று! பத்தி சொல்லும்போது, அதன் பங்களிப்பாளர்களை குறிப்பிடாம இருக்க முடியாது. நாங்க (நடுநிலையை உறுதி செய்தல்ங்கிற நோக்கத்தில்) கடைப்பிடிக்கற சில இறுக்கமான விதிகளால, எங்கள் படைப்புகளை இந்த தளத்தில் அறவே காட்ட முடியாத நிலை. அப்படியிருந்தும் தளத்தைத் தொடர்ந்து இற்றைப் படுத்தி அயராமல் பங்களிக்கும் தன்னலமற்ற சக பங்களிப்பாளர்களை நினைச்சு ரொம்பவே பெருமையா இருக்கு. இது போன்ற பரவலாக்கப்பட்ட முயற்சி மட்டும் இருந்திருக்கலைன்னா, நாங்க எடுத்துக் கொண்ட இலக்கை நோக்கி என்னைக்குமே நகர முடிந்திருக்காது. ஆகவே, இந்தத் தளத்தின் ‘brought to you by’ என்ற மரியாதை, தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இத்தளத்திற்குப் பங்களித்தவர்களையே சேரும். அவர்களைப் போலவே மேலும் பல பங்களிப்பாளர்களும் இணைந்து ஆர்வத்தோட பங்காற்றினா, இணையத்தமிழுக்கு ஒரு அருமையான சொத்தாக மாற்று! வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு. அப்படி பங்களிக்க விரும்புவோர் உங்கள் தயக்கங்களை புறம் தள்ளி விட்டு, எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கிறேன். (விவரங்களுக்கு, இப்பக்கத்தைப் பார்க்கவும்)

பங்களிப்பாளர்களுக்கு அடுத்தபடியா நினைவு கூர வேண்டியவங்க – மாற்று! தளத்தைப் பற்றி பல்வேறு தளங்களிலும், சந்தர்ப்பங்களிலும் அறிமுகம் செய்து, அதை பல வாசகர்களிடம் கொண்டு போக உதவிய நலம் விரும்பிகள், இணைய நட்புகள், ஊடகவியலாளர்கள், மற்றும் எங்கள் தளத்திற்கு தங்கள் பதிவிலிருந்து இணைப்பு தந்து சிறப்பித்த முன்பின் தெரியாத பதிவர்கள். இவங்களோட ஆதரவு இருந்ததால்தான் மாற்று! பத்தி பலருக்குத் தெரியவந்திருக்கு, மற்றும் நாளுக்கு நாள் அதன் வருகையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிச்சிக்கிட்டு இருக்கு. இந்த word of mouth / வாய்ச்சொல் வீரர்களுக்கு 😉 என்னோட வந்தனங்கள்.

இறுதியா, உறுதியா நன்றி கூறப்பட வேண்டியவங்க இத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை உருவாக்கியவங்கதான். மேல குறிப்பிட்ட தவிர்க்கப்பட வேண்டிய படைப்புகளே இணைய வெளியை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கும்போது, தங்களோட மாறுபட்ட படைப்புகளால மொழியை வாழவச்சிக்கிட்டு இருக்கிறவங்க இந்த படைப்பாளிகள்தான். அவர்களை இனங்காணுவதற்காகத்தான் மாற்று! ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்காங்கங்கிறதுதான் நாங்கள் மாற்றை உருவாக்கி நடத்தியதில் தெரிந்து கொண்ட உண்மை. இந்த உண்மைக்காக, சாத்தானிலிருந்து flying spaghetti monster வரை உள்ள அனைத்து தெய்வீக சக்திகளுக்கும் நன்றி 🙂 நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூற விரும்புவது Savior என்று நான்அழைக்க விரும்பும், ஆனால் Xavier என்ற பெயரைக் கொண்ட பதிவரை. பல உன்னதமான வாசிக்கும் கணங்களை எனக்கு வழங்கியுள்ளீர் நண்பரே!

சரி, இப்பொ சொல்ல வந்த விஷயத்துக்குப் போவோம். மாற்று! தளத்தில் சில நுட்ப ரீதீயான மேம்பாடுகளை செஞ்சிருக்கோம். குறிப்பிடும்படியான மாறுதல்கள்:

 • தள வடிமைப்பில் மற்றும் வண்ணங்களில் சில முன்னேற்றங்களை செய்திருக்கோம்
 • பதிவர் வாரியான பட்டியலைப் பெற பதிவர் தேடல் / தேர்வு வசதி, அதை போல் குறிச்சொல் தேர்வு வசதி ஆகியவற்றின் பயன்பாடு எளிதாகியிருக்குன்னு நம்பறோம்
 • (‘+’ குறியீட்டைச் சொடுக்கி) இடுகைகளை விரிவாக்கினா, இடுகையின் முதல் சில வரிகள் காட்டப்படுவது தெரிந்ததே. அதை சற்று (2-3 மடங்கு) நீளமாக்கியிருக்கோம். (ஒரு இடுகையைப் படிக்கலாமா வேண்டாமான்னு முடிவு செய்ய இது உதவலாம்)
 • இடுகைப் பட்டியலில் காட்டப்படற பதிவர் பெயரைச் சொடுக்கி, மாற்றில் பகிரப்பட்ட அவரது இதர இடுகைகளை பாக்கலாம்

இப்போதைக்கு இவ்வளவுதான். ஆனா, மேம்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்ன்னு உறுதியா சொல்ல முடியும். நாங்க எதிர்பார்கிறது, மேலும் பல பங்களிப்பாளர்கள் எங்களோட இணைந்து தணியாத ஆர்வத்துடன் செயல்படுவாங்கன்னு, மற்றும் நல்ல படைப்பாளிகள் தொடர்ந்து நல்லா எழுதுவாங்க, அதோட சராசரியா எழுதிக்கிட்டு இருப்பவர்களும், தீவிர எழுத்து பக்கமா நகருவாங்க என்பது. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறினா, நிச்சயமா இணையத்தில் தமிழை வாழ வச்சிடலாம்.

4 thoughts on “தள மேம்பாடுகள், இன்ன பிற…

 1. ரவிசங்கர்

  இவ்வளவு பெரிய இடுகையை twitter என்று சொல்லியதற்கு twitter சார்பாக வழக்கு போட விரும்புகிறேன் 😉

 2. சேவியர்

  //நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூற விரும்புவது Savior என்று நான்அழைக்க விரும்பும், ஆனால் Xavier என்ற பெயரைக் கொண்ட பதிவரை. பல உன்னதமான வாசிக்கும் கணங்களை எனக்கு வழங்கியுள்ளீர் நண்பரே!
  //

  சிலிர்க்க வைத்து விட்டீர்கள். மனமார்ந்த நன்றிகள். நன்றி என்னும் ஒற்றை வார்த்தையில் எனது மன ஓட்டத்தைச் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை.

 3. Voice on Wings

  சேவியர், உங்கள் கவிதைக்கு நான் பரம ரசிகன்.
  “பின்னல் போட்ட மின்னல்காரி,
  காதில் காதல் சொல்வாளா……”
  அப்படீங்கற கவிதையை நான் படித்து, ஒலிப்பதிவு செய்து அந்தக் கோப்பை இன்னமும் பத்திரமா என் கணினியில் வச்சிருக்கேன் 🙂 ஒரிரு இடங்களில் நான் மூச்சு வாங்குவதும் பதிவாகி விட்டதால், அதை வலையேற்றாமல் விட்டு விட்டேன். உங்கள் நற்பணியைத் தொடருங்கள் 🙂

 4. சேவியர்

  //சேவியர், உங்கள் கவிதைக்கு நான் பரம ரசிகன்.
  “பின்னல் போட்ட மின்னல்காரி,
  காதில் காதல் சொல்வாளா……”
  அப்படீங்கற கவிதையை நான் படித்து, ஒலிப்பதிவு செய்து அந்தக் கோப்பை இன்னமும் பத்திரமா என் கணினியில் வச்சிருக்கேன்//

  வாவ்,…கலக்கறீங்க !!!. எனக்கு மட்டும் அனுப்புங்களேன் அந்த பாடலை 🙂 கேட்க ஆவலாய் இருக்கிறது. xavier.dasaian@gmail.com க்கு அனுப்புங்கள் 🙂

Comments are closed.